
கோலாலாம்பூர், ஆகஸ்ட்-27,வீட்டில் ஒருவர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக எத்தனை மதுபாட்டில்களை வைத்திருக்கிறார் என கணக்கிடுவதைவிட, மதுபானக் கடத்தல் கும்பல்களை முறியடிப்பதில் சுங்கத் துறை கவனம் செலுத்த வேண்டும் என, சுற்றுலா, கலை, பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ தியோங் கிங் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.
1976-ஆம் ஆண்டு கலால் சட்டம், வீட்டில் தனிப்பட்ட பயன்பாட்டுக்காக மதுபானங்களை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல எனக் கூறுகிறது;
ஆனால், வீட்டில் அதிக அளவு மதுபானங்களை சேமித்து வைப்பது சட்டத்திற்கு எதிரானது என ஒரு அதிகாரி ஒருவர் கூறியிருப்பதன் மூலம், சுங்கத் துறை பொதுமக்களை குழப்புகிறது என அந்த பிந்துலு எம்.பி. கூறினார்.
இதுபோன்ற பேச்சுகள் பொது மக்களை தவறாக வழிநடத்துகின்றன; தற்போதுள்ள சட்டங்கள் மீதான அவர்களின் நம்பிக்கையை சிதைக்கின்றன, மேலும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன என தியோங் தனது முகநூல் பதிவில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொது மக்கள் உண்மையான பிரச்னைகள் தீர்க்கப்படுவதைக் காண வரி செலுத்துகிறார்கள்; அதிகாரிகளோ தவறான விஷயங்களில் தங்கள் சக்தியை வீணடிக்கின்றனர்; இது
தொடர்ந்துக்கொண்டே இருந்தால், அரசாங்கத்தின் மீது மேலும் விரக்தியையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது என்றார் அவர்.
வட மண்டல மதுபான விற்பனையாளர்கள் சங்கத்துடனான ஒரு உரையாடல் நிகழ்வில், சுங்கத் துறை உதவி இயக்குநர் வி. கமல்ஹாசன், தனிப்பட்ட முறையில் மதுபானங்களை பெரிய அளவில் சேகரித்து வைத்திருப்பது 1976- ஆம் ஆண்டு கலால் சட்டத்தை மீறுவதாகக் கருதப்படலாம் எனக் கூறியதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.
மதுபானங்களை சேமிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் எந்தவொரு வளாகமும் உரிமம் பெற்றிருக்க வேண்டும்; அவ்வகையில், பெரும்பாலும் சிறப்பு நிகழ்ச்சிகளின் போது வாங்கி சேர்க்கப்பட்ட 30 அல்லது 40 பாட்டில்கள் வரையிலான மதுபானங்களை, உரிமம் இன்றி வீட்டில் வைக்க அனுமதிக்கப்படாது என்றும் கமல்ஹாசன் கூறியதாக Sin Chew Daily செய்தி வெளியிட்டிருந்தது.