கோலாலம்பூர், டிசம்பர்-5 – மருத்துவ சிகிச்சைக் கட்டணம் மற்றும் காப்புறுதி பிரீமியம் கட்டண உயர்வால் மலேசியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இப்பிரச்னைக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காணவில்லை என்றால், அது தனிநபர்களை மட்டும் பாதிக்காது, மாறாக நாட்டின் சுகாதாரத் துறையின் எதிர்காலத்தையே பாதித்து விடுமென, செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் கவலைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மருத்துவ பணவீக்க விகிதம் ஆண்டுக்கு 12 முதல் 15 விழுக்காடு வரை அதிகரிக்கலாமென ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மருந்துகளின் விலை உயர்வு, அதிநவீன சிகிச்சை முறைகள், தனியார் மருத்துவமனைகளுக்கான தேவை அதிகரிப்பு ஆகியவை அதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
இதனால் காப்புறுதி பிரீமியம் கட்டணமும் உயர்ந்துள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் அது 30 முதல் 50 விழுக்காட்டு உயர்வைப் பதிவுச் செய்துள்ளது.
அதனைச் சமாளிக்க முடியாமல் B40, M40 தரப்பினர் காப்புறுதி பாதுகாப்பு இல்லாமல் தவிக்கின்றனர்.
நாட்டில் 22 விழுக்காட்டு மக்கள் மட்டுமே காப்புறுதி பாதுகாப்பைக் கொண்டிருக்கின்றனர்.
மற்றவர்கள் அரசாங்க மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர்.
இதனால் மக்கள் எண்ணிக்கையைச் சமாளிக்க முடியாமல் அரசாங்க மருத்துவமனைகளும் திணறுகின்றன.
ஆக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக் கட்டணங்களை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என டத்தோ சிவராஜ் பரிந்துரைத்தார்.
அதோடு B40, M40 மக்கள் வாங்கும் சக்திக்குட்பட்ட காப்புறுதி பாதுகாப்புத் திட்டங்களை, காப்புறுதி நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும்.
அரசாங்க மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று விடாமலிருக்க, அவர்களுக்கு உரிய ஊக்கத்தொகை வழங்குவது, சிங்கப்பூரில் இருப்பது போன்ற தேசிய காப்புறுதி பாதுகாப்புத் திட்டத்தை அறிமுகம் செய்வது போன்ற பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார்.