
பத்து மாவோங், ஆகஸ்ட்-5 – பினாங்கு, பத்து மாவோங்கில் ஒரு வீட்டில் கொள்ளையிடும் முயற்சி தோல்வியில் முடிந்ததால் அங்கிருந்து தப்பிய ஆடவன், மறதியில் விட்டுச் சென்ற பொருளை எடுப்பதற்காக திரும்பிய போது மாட்டிக் கொண்டான்.
ஞாயிறன்று பின்பக்க வழியாக அவ்வீட்டினுள் நுழைந்தவன், உரிமையாளர் இருப்பதை உணர்ந்து வந்த வழியே திரும்பி விட்டான்.
எனினும், தப்பிக்கும் அவசரத்தில் தனக்குச் சொந்தமான பொருளொன்றை மறந்து விட்டு வந்ததால், அதை எடுப்பதற்காக பின்னர் அதே வீட்டுக்கு அவன் திரும்பினான்.
அவனது ‘துரதிஷ்டம்’, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரின் நண்பர்களிடம் அவன் வசமாக சிக்கினான்.
இதையடுத்து போலீஸிடம் ஒப்படைக்கப்பட்ட அவ்வாடவன், விசாரணைக்காக இன்று தடுத்து வைக்கப்படுகிறான்.
சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டதோடு, ஏற்கனவே பல குற்றப்பதிவுகளைக் கொண்டிருப்பதாக பாராட் டாயா (Barat Daya) போலீஸ் கூறியது.