Latestமலேசியா

மற்ற சமயத்தாரின் நிகழ்வுகளில் பங்கேற்கும் முஸ்லீம்களுக்குப் புதிய விதிமுறையா? ம.இ.கா கடும் தாக்கு

கோலாலம்பூர், பிப்ரவரி-5 – முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் விழாக்கள், இறுதிச் சடங்குகள் அல்லது வேறு எந்த நிகழ்வுகளுக்கும் தலைவர்களையோ அல்லது முஸ்லிம்களையோ அழைக்கும்போது, இஸ்லாமிய அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்ற புதிய விதிமுறையை ம.இ.கா சாடியுள்ளது.

அரசாங்கம் கூறுவதைப் பார்த்தால், முஸ்லீம் அல்லாதவரின் இறுதிச் சடங்கு நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒரு முஸ்லிம் நண்பர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு ஒப்புதல் பெற வேண்டுமா என, ம.இ.கா தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் கேட்டார்.

ஒன்றுபட்ட மற்றும் இணக்கமான நாடாக இருப்பதன் மூலம் மலேசியா அமைதியையும் செழிப்பையும் அனுபவித்து வருகிறது.

எனவே, முஸ்லீம்களுக்கான வழிகாட்டுதல்களில் நிச்சயமாக அத்தகைய திருத்தம் தேவையில்லை என்றே ம.இ.கா கருதுவதாக அவர் சொன்னார்.

இஸ்லாமிய சமய விவகாரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ Dr முஹமட் நாயிம் மொக்தார் மக்களவையில் வழங்கிய பதில் தான், இன்று பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.

சபா முதல் பெர்லிஸ் வரை பல்வேறு இனங்களிடையே நம்பிக்கை, சகிப்புத்தன்மை மற்றும் நல்லெண்ணத்தின் அடிப்படையில் இந்த தேசத்தைக் கட்டியெழுப்பிய நமது முன்னோடித் தலைவர்களின் முயற்சிகளை, அரசாங்கத்தின் இந்நடவடிக்கை குறைத்து மதிப்பிடுகிறது.

சர்ச்சைக்குரிய இச்சட்டத் திருத்தம் ஒற்றுமை அரசாங்கத்திற்கு முஸ்லீம் அல்லாதவர்களின் ஆதரவைக் குறைக்க வாய்ப்புள்ளது.

எனவே, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விஷயத்தில் அவசரமாக தலையிட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.

முஸ்லீம்களாக இருந்தாலும் சரி, முஸ்லீம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி, சமய உணர்வுகளைத் தொடும் முடிவுகளை எடுக்கும்போது அரசாங்கமும் அதன் தலைவர்களும் மற்ற இனங்களுடன் கலந்தாலோசிக்க வேண்டுமென ம.இ.கா வலியுறுத்துவதாக சரவணன் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!