
கோலாலம்பூர், டிச 29 – மலாக்கா டுரியான் துங்காலில் நவம்பர் 24ஆம் தேதி மூவருக்கு எதிராக போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதல் தொடர்பான ஆடியோ பதிவு தடயயியல் ஆய்வுக்காக CyberSecurity மலேசியாவிடம் போலீஸ் ஒப்படைத்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள், புகார்தாரர் மற்றும் அந்த நடவடிக்கையின்போது சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குரல்களும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகளுக்காக காத்திருக்கும் வேளையில் , போலீஸ் அதிகாரிகள் மீதான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அவர்கள் தீவிர அமலாக்கப் பணிகளில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக M.குமார் கூறினார்.
இந்த விவகாரம் கொலைக்கான தண்டனைச் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டிருந்தாலும் , மேலும் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு போலீஸ் துறை முதலில் தவறான நடத்தைக்கான கூறுகளை கண்டறிய வேண்டும் என சட்டத்துறை தலைவர் அலுவலகத்தின் கருத்துடன் ஒத்துப்போகிறது என்று அவர் தெரிவித்தார்.
அதோடு முக்கிய தடயங்களாக ஆடியோ பதிவு அமைந்திருப்பதாகவும் குமார் தெரிவித்தார்.
நேர்மை மற்றும் தரநிலை இணக்கத் துறை தனி விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், குற்றப் புலனாய்வுத்துறையும் அதன் விசாரணையில் குற்றவியல் கூறுகள் மீது கவனம் செலுத்துகிறது.
விசாரணை தொடங்கியதிலிருந்து 45 பேரிடம் வாய்மொழி ரீதியிலான வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குமார் தெரிவித்தார்.



