
கோலாலம்பூர், டிசம்பர்-11 – நவம்பர் 24-ஆம் தேதி மலாக்கா போலீஸாரால் 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், புக்கிட் அமான் இதுவரை 7 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவுச் செய்துள்ளது.
அவர்களில் மூவர், கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள்; நால்வர் மருத்துவப் பணியாளர்கள் என, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் கூறினார்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு ஆடியோ குரல் பதிவும், கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தால் நேற்று புக்கிட் அமானில் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், CyberSecurity Malaysia உதவியுடன் சாட்சிகளின் குரல் மாதிரியும் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டதாக குமார் சொன்னார்.
21 வயது M புஷ்பநாதன், 24 வயது T புவனேஸ்வரன், 29 வயது G லோகேஸ்வரன் ஆகிய மூவரும் “execution-style” அதாவது கிட்டத்தட்ட மரணதண்டனை பாணியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக பிரச்னை வெடித்துள்ளது.
மூவரும் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்றும், சம்பவத்தின் போது ஒரு போலீஸ்காரரை பாராங் கத்தியால் அவர்கள் தாக்கி காயம் விளைவித்ததாலுமே சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் மலாக்கா போலீஸ் முன்னதாகக் கூறியிருந்தது.
ஆனால், சுடப்படுவதற்கு முன் அம்மூவரில் ஒருவர் தனது மனைவியிடம் கடைசியாக பேசிய ஆடியோ குரல் பதிவு, போலீஸ் கூறிய விளக்கத்துக்கு முரணாக உள்ளது; எனவே இதில் உள்ள சந்தேகங்களை விரிவாக விசாரிக்க வேண்டுமென குடும்பத்தார் வற்புறுத்தியதை அடுத்து, விசாரணையை புக்கிட் அமான் எடுத்துக் கொண்டுள்ளது.



