
பெட்டாலிங் ஜெயா, ஜூலை-13- MBR எனப்படும் மலேசிய சாதனை புத்தகம் அதன் 30-ஆம் நிறைவாண்டை தொட்டுள்ளது.
அச்சாதனையை கொண்டாடும் வகையில் “Record Breaking Night” என்ற கருப்பொருளில் சிலாங்கூர், பெட்டாலிங் ஜெயாவில் பிரமாண்ட இரவு விருந்துக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது.
நாடு முழுவதிலுமிருந்து விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், நிறுவனத் தலைவர்கள் மற்றும் சாதனையாளர்கள் உட்பட 800-க்கும் மேற்பட்ட கௌரவ விருந்தினர்கள் அதில் கலந்துக் கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக தொடர்புத் துறை துணையமைச்சர் தியோ நீ சிங் கலந்துகொண்டார்; MBR தலைவர் டத்தோ ஸ்ரீ மைக்கல் தியோவும் உடனிருந்தார்.
மலேசிய சாதனை புத்தகம் இதுவரை 17 பதிப்புகளில் 8,800 சாதனைகளை அங்கீகரித்துள்ளதை தியோ நீ சிங் தமதுரையில் பாராட்டினார்.
விழாவில் சிறப்பம்சமாக, பல்வேறு துறைகளில் தேசிய சாதனைகளை வைத்துள்ள 91 பேர் கௌரவிக்கப்பட்டனர்.
அதோடு, எவரெஸ்ட் மலையேறிய முதல் மலேசியர் என்ற பெருமையைப் பெற்ற டத்தோ எம். மகேந்திரன் உட்பட பல மலேசிய சாதனையாளர்களின் ஊக்கமளிக்கும் சிறப்பு நேர்காணல்கள் விழாவை மேலும் சிறப்பித்தன.
அதே சமயம் ஆகஸ்டில் பெர்னாமாவில் ஒளிபரப்பாகவுள்ள “மலேசியா லுவார் பியாசா” எனும் தொலைக்காட்சித் தொடரின் முன்னோட்ட காட்சியும் விழாவில் திரையிடப்பட்டது.
டத்தோ மகேந்திரன், உலகத் தரம் வாய்ந்த கோபுர ஓட்டப்பந்தய வீரர் சோ வை சிங், எஸ்.டி. ரோஸ்யம் போன்ற வெற்றிகரமான உள்ளூர் நிறுவனங்கள் உட்பட 30 முதல் 40 மலேசிய சாதனையாளர்களின் ஒரு சாதனைப் பயணத் தொடராக இது ஒளியேறும்.
இத்தொடர் வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல, தங்கள் சாதனைகள் மூலம் நாட்டைப் பெருமைப்படுத்திய மலேசியர்களுக்கான ஓர் அங்கீகாரம் என துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார்.