மலேசியா -தாய்லாந்து நெருக்கடி மலேசியா நிபந்தனை எதுவும் விதிக்கவில்லை – பிரதமர் தகவல்

கோலாலம்பூர், நவ 11 – தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கிடையிலான அமைதி உடன்பாடு முயற்சியில் மலேசியா எந்தவொரு நிபந்தனையையும் விதிக்கவில்லை. அவ்விரு நாடுகளுக்கிடையிலான பதட்டத்தை குறைப்பதற்கு மலேசியா ஒருங்கிணைப்பாளராக மட்டுமே செயல்பட்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாம் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டோம். எந்த நிபந்தனையாக இருந்தாலும் தாய்லாந்தும் , கம்போடியாவும் நிர்ணயித்துக் கொள்ளட்டும் என்று கூறிவிட்டோம். அமைதி முயற்சி மற்றும் அதற்கான ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதற்கு மட்டுமே உதவ முடியும் என்று நாங்கள் கூறியிருந்தோம் என இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின்போது பதில் அளித்தபோது அன்வார் தெரிவித்தார்.
அதோடு தாய்லாந்து -கம்போடியா நெருக்கடியை பயன்படுத்திக் கொண்டு அமைதி முயற்சியில் மலேசியா தோல்வி கண்டுவிட்டதாக சில தனிப்பட்ட நபர்கள் கூறுவதையும் பிரதமர் சாடினார்.
அந்த அமைதி முயற்சி இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றாலும் அமைதி உடன்பாடு தொடர்வதை உறுதிப்படுத்துவதற்கு தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய இரு நாடுகளுடனும் அணுக்கமான நட்புறவை மலேசியா கொண்டுள்ளது.
தாம் டிசம்பர் மாதம்வரை ஆசியானின் தலைவராக இருப்பதால் தாய்லாந்தும் கம்போடியாவும் இன்னமும் நம்மிடம் தொடர்பு கொண்டு வருவதாகவும் அன்வார் கூறினார்.



