
பாங்கி, பிப்ரவரி-23 – 2025 ஆசியான் தலைமைத்துவம், மலேசியாவை முதன்மை முதலீடு, சுற்றுலா மற்றும் வர்த்தகத் தளமாக அடையாளம் காட்டுமென பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
எனவே, மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில், semiconductor, AI அதிநவீன தொழில்நுட்பம், தரவு மையம், புதிய ஆற்றல், விவசாயம் மற்றும் உணவுத் தொழில்நுட்பத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தும்.
இந்நிலையில், மலேசியாவின் ஆசியான் தலைமைக்கான ஏற்பாடுகள் குறித்து பிரதமர் மனநிறைவுத் தெரிவித்தார்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் மிகச் சிறந்ததை வழங்கி, உலக அரங்கில் மலேசியாவின் அந்தஸ்தை உயர்த்த அரசாங்கம் தயாராக உள்ளது.
சிலாங்கூர் பாங்கியில் மடானி அரசாங்க அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் புத்துணர்ச்சி முகாமிலும் மலேசிய-ஆசியான் விவகாரம் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ஆசியான் தலைமையின் போது நாட்டின் நற்தோற்றத்தை வெளிப்படுத்துவது, வர்த்தக வாய்ப்புகளை அதிகரிப்பது ஆகிய 2 முக்கியக் கூறுகளுக்கு மலேசியா முன்னுரிமை வழங்குமென டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
ஆசியான் தலைவர் என்ற முறையில் அதன் உச்ச நிலை மாநாடு உட்பட 300-க்கும் மேற்பட்ட கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் நிகழ்வுகளை மலேசியா இவ்வாண்டு ஏற்று நடத்துகிறது.
மலேசியா இதற்கு முன் 1977, 1997, 2005, 2015-ஆம் ஆண்டுகளில் ஆசியான் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளது.