
கோலாலம்பூர், அக்டோபர்-23 – மலேசியாவின் வளமும் செல்வமும் முஸ்லீம் அல்லாதோரின் கைகளுக்குச் சென்று விட்டதாகவும், இப்படியே போனால் சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கும் பாலஸ்தீனர்களின் நிலை தான் பூமிபுத்ராக்களுக்கு மிஞ்சும் என்றும் பாஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பேசியிருப்பதை, ஜெலுத்தோங் எம்.பி. RSN ராயர் கண்டித்துள்ளார்.
_”நாட்டின் பொருளாதாரம், வணிக வளாகங்கள், பெருநிறுவனங்கள், வியூக நிலங்கள் என அனைத்தும் படிப்படியாக முஸ்லீம் அல்லாதோர் மற்றும் பூமிபுத்ரா அல்லாதோரின் வசம் செல்கின்றன”_
_”அதோடு நிற்காமல், இப்போது புத்ராஜெயாவுக்குள்ளும் நுழைந்து, சட்டங்களை இயற்றும் அளவுக்கு ‘அவர்கள்’ சக்தி பெற்று விட்டார்கள். பாலஸ்தீனத்தின் புதிய வரலாறு மலேசிய மண்ணிலும் மெல்ல எழுதப்படுகிறது”_ என்று பெங்காலான் செப்பா (Pengkalan Chepa) எம்.பியான டத்தோ மார்சுக் ஷாரி (Marzuk Shaary) பேசியுள்ளார்.
இது அதிர்ச்சியளிக்கும் கூற்று என சாடிய ராயர், பல்லின மக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் நாட்டில் இதுபோன்ற பிரிவினைவாத பேச்சுகள் அனுமதிக்கப்படக் கூடாது என்றார்.
இதைவிட ஆச்சரியம் என்னவென்றால், பாஸ் கட்சி இடம் பெற்றிருக்கும் எதிர்கட்சி கூட்டணியில் உள்ள இந்தியப் பிரதிநிதிகள், இந்த பாஸ் தலைவரின் பேச்சைக் கண்டிக்காமல் இருப்பது தான் என ராயர் சொன்னார்.
MIPP எனும் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் பி.புனிதன், உரிமைக் கட்சித் தலைவர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, MAP எனும் மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பி. வேதமூர்த்தி ஆகியோர் இன்னமும் மௌனம் காக்கின்றனர்.
பல்லினக் கட்சி எனக் கூறிக் கொள்ளும் கெராக்கானும் வாயைத் திறக்கவில்லை.
இதிலிருந்தே முஸ்லீம் அல்லாதோரின் நலன் காக்கும் இவர்களின் லட்சணம் தெரிவதாகக் காட்டமாகக் கூறிய ராயர், இதுபோன்ற பிரிவினைவாத சிந்தனைத் தொடரும் வரையில் பாஸ் கட்சியால் அரசாங்கத்தை அமைக்க முடியாது என்றார்.
இன்று மக்களவையில் நடத்திய செய்தியாளர் சந்தாப்பில் ராயர் அவ்வாறு கூறினார்.