
புது டெல்லி, ஜனவரி-26-மலேசியாவில் 500-க்கும் மேற்பட்ட தமிழ்ப் பள்ளிகள் இயங்குவது இந்திய வம்சாவளி மக்களுக்கு பெருமை என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
மலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் தமிழுடன் மற்ற பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கப்படுகின்றன.
தெலுங்கு, பஞ்சாபி மொழிகளுடன் மற்ற இந்திய மொழிகளுக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இப்படி, மலேசியாவில் இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உண்மையிலேயே மெச்சும்படியாக உள்ளன.
இந்த மொழி-கலாச்சார காப்பில் ஈடுபட்டு வரும் மலேசிய இந்திய சமூகத்தினர் குறித்து தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது இந்திய–மலேசிய உறவுகளை மேலும் வலுப்படுத்துகிறது என்றார் அவர்.
பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி மூலம் Man Ki Bath எனப்படும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
அதன் அண்மைய நிகழ்ச்சியில் பேசிய போதே மலேசியா பற்றி அவர் குறிப்பிட்டார்.
இந்தியக் கலாச்சாரம் உலகளவில் விரிவடைந்து வருவதோடு, அதை பாதுகாப்பதில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர்.
இந்நிலையில் பாரம்பரியங்கள், மொழிகள், மதிப்புகள் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கு தொடர்ந்து பரிமாற வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.



