
ஜொகூர், டிசம்பர் 1 – ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியில் இவ்வாண்டு புறப்பாடத்தில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு பள்ளி திறந்த மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. புறப்பாடப்பிரிவு துணைத்தலைமையாசிரியை திருமதி.சந்திரமோகினி அவர்களின் வழிக்காட்டலில் இந்நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விளையாட்டு, சீருடை இயக்கம் மற்றும் கழகம் ஆகிய பிரிவுகளில் சிறந்த அடைவுநிலையைப் பெற்றுள்ள மாணவர்கள் மட்டுமின்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி சாதனை பதித்துப் பள்ளிக்குப் பேரும் புகழும் ஈட்டித் தந்த மாணவச் செல்வங்களை இன்று சிறப்பிக்கும் வகையில் பரிசுகள் வழங்கப்பட்டதாகக் கூறிய பள்ளியின் துணணத்தலைமையாசிரியை திருமதி.கி.பிரமிளா அவர்கள், இந்த அங்கீகாரம் மாணவர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்து அவர்களை வெற்றி பாதைக்கு இட்டுச்செல்லும் எனக் கூறினார்.

இன்றைய நிகழ்வின் சிறப்புப் பிரமுகர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் பெரும் மதிப்பிற்குரிய செனட்டர் டத்தோ சிவராஜ் சந்திரன் அவர்கள் இம்மாணவர் சமுதாயம் எதிர்காலத்தில் தலைசிறந்து விளங்க வேண்டுமெனில் கல்வி மட்டுமின்றி தன்னாளுமை திறனைப் பெற்றிருக்க வேண்டுமெனக் கூறினார்.
மேலும், இன்றைய உலக மாற்றத்திற்கேற்ப அனைத்தையும் கற்று எதிலும் சாதனை படைக்க வேண்டுமென்ற உறுதியும் மனத்திடமும் மானவர்களிடையே வேரூன்ற புறப்பாட நடவடிக்கை துணைபுரிவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்துப் புறப்பாட நடவடிக்கையில் நனிச்சிறந்த 26 மாணவர்களுக்கு விருதினை எடுத்து வழங்கினார்.




மேலும், இந்நிகழ்விற்கு வருகைபுரிந்த சிறப்புப் பிரமுகரும் மற்றும் இஷ்கண்டார் புத்திரி மாநகர் மன்ற உறுப்பினர் திரு.வெ.சங்கரபாண்டியன் அவர்களும் சிறப்பு விருதினைப் பெற்ற 87 மாணவர்களுக்குக் கோப்பைகளை எடுத்து வழங்கிச் சிறப்பித்தனர்.
இவ்வாண்டு விருதுகளைத் தட்டிச் சென்ற மாணவர்களின் மகிழ்ச்சியலை அரங்கமே நிரம்பியிருந்து இன்றைய நிகழ்வு எவ்வித தங்குத்தடையுமின்றி நடைபெற துணை நின்ற பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி துனைத்தலைமையாசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத்தலைவர் திரு.பிரகாஷ் மற்றும் செயலவையினர் அனைவருக்கும் புறப்பாடப்பிரிவு துணைத்தலைமையாசிரியை அவர்கள் நன்றினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.



