
கோலாலம்பூர், நவம்பர்-14, இன்ஸ்பெக்டர் ஷீலா மீண்டும் வைரலாகியுள்ளார்.
இம்முறை சாலையோர food truck கடைக்காரர் என நம்பப்படும் ஆடவருடன் அவர் ‘பிரச்னை’ செய்வது 43 வினாடியில் பதிவாகியுள்ளது.
டாங் வாங்கி போலீஸ் நிலையமருகே அவ்வீடியோ பதிவுச் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
அதில் அவர் சம்பந்தப்பட்ட ஆடவரை ஏதோ திட்டிக் கொண்டே கைப்பேசியில் வீடியோ எடுக்கிறார்.
அவ்வாடவரும் பதிலுக்கு ஷீலாவை வீடியோ எடுக்கிறார்.
கடையில் அமர்ந்திருக்கும் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் அதனைப் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு கட்டத்தில் ஷீலா அங்கிருந்து நகருகின்றார்.
வீடியோவைப் பார்த்த வலைத்தளவாசிகள், இப்படி அடிக்கடி பொது வெளியில் ஷீலா ‘பிரச்னை’ செய்து அசௌகரியத்தை ஏற்படுத்துவதை அதிகாரிகள் கடுமையாகக் கருதி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர்.
சில தினங்களுக்கு முன்னர் தான் இதே போல் ஒரு போலீஸ்காரரை பணியைச் செய்ய விடாமல் தடுத்தற்காக அவர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டார்.



