
மாலே, நவம்பர்-2,
தெற்காசியாவில் வெறும் 500,000 மக்கள் தொகையைக் கொண்ட மிகக் சிறிய நாடே மாலத்தீவு.
ஆனால், ‘மூர்த்தி சிறியதாயினும் கீர்த்தி பெரியது’ என்பது போல, உலகில் இதுவரை வேறெந்த நாடும் செய்யாத வகையில், 2007 ஜனவரி 1-ஆம் தேதிக்குப் பிறகு பிறந்த அதாவது 18 வயதுக்குக் கீழ்பட்ட அனைவருக்கும் புகைப்பிடிக்க அந்நாட்டரசு தடை விதித்துள்ளது.
அதோடு அனைத்து புகையிலைப் பொருட்களை வாங்க, பயன்படுத்த அல்லது விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ள இப்புதி விதிமுறை, வெளிநாட்டு சுற்றுப்பயணிகளையும் உள்ளடக்கியுள்ளது மற்றோர் ஆச்சரியமாகும்.
“அறவே புகையிலை அற்ற தலைமுறையை” உருவாக்கி, பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதே அதன் நோக்கம் என மாலத்தீவு அரசாங்கம் கூறுகிறது.
இச்சட்டம் அனைத்து வகை புகையிலைப் பொருட்கள், மின்னியல் சிகரெட், வேப் சாதனங்களையும் உள்ளடக்குகிறது.
எனவே, விற்பனையாளர்கள் வாங்குபவரின் வயதை கட்டாயம் சரிபார்க்க வேண்டும்; மீறி, வயது குறைந்தவர்களுக்கு புகையிலைப் பொருட்களை விற்றால் 3,200 டாலர் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் வேப் சாதனங்களைப் பயன்படுத்தினால் 320 டாலர் அபராதம் விதிக்கப்படும்.



