
புத்ராஜெயா, ஜூலை-18- மேல்முறையீட்டு நிதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சாலே (Wan Ahmad Farid Wan Salleh) நாட்டின் புதியத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இம்மாதத் தொடக்கத்தில் கட்டாயப் பணி ஓய்வுப் பெற்ற துன் தெங்கு மைமுன் துவான் மாட்டுக்கு (Tun Tengku Maimun Tuan Mat) பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
62 வயது வான் அஹ்மாட் ஃபாரிட், முன்பு அம்னோ உறுப்பினராக இருந்தபோது மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மாட் படாவியின் (Abdullah Ahmad Badawi) அரசியல் செயலாளராக இருந்துள்ளார்.
2008 முதல் ஓராண்டுக்கு உள்துறை துணையமைச்சராகவும், அதற்கு முன் செனட்டராகவும் பதவி வகித்தவராவார்.
2009-ல் குவாலா திரங்கானு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.எனினும் 2013-ல் அரசியிலிலிருந்து விலகினார்.
இவ்வேளையில், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக டத்தோ அபு பாக்கார் ஜாய்ஸ் (Abu Bakar Jais) நியமனம் செய்யப்பட, மாமன்னர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
சபா – சரவாக் தலைமை நீதிபதியாக டத்தோ அசிசா நவாவி (Azizah Nawawi) நியமிக்கப்பட்டுள்ளார்.
கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப, பிரதமர் முன்மொழிந்த பெயர்கள் குறித்து மலாய் ஆட்சியாளர் மன்றக் கூட்டத்தில் கலந்தாலோசித்து மாமன்னர் அந்நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
மூவரும் வரும் ஜூலை 28-ஆம் தேதி இஸ்தானா நெகாராவில் பதவி நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டு, உறுதிமொழி எடுத்துக் கொள்வர்.
கூட்டரசு நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் அலுவலகம் இவ்விவரங்களை அறிக்கையொன்றில் வெளியிட்டது.