
கோலாலாம்பூர், நவம்பர்-10,
தனது பீட்சா பொட்டலங்களில் முருகனின் திருவுருவப் படம் பொறிக்கப்பட்டது சர்ச்சையான நிலையில், அதற்கு US Pizza Malaysia நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
அவ்விவகாரத்தை, மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார், முன்னதாக சமூக ஊடகம் வாயிலாக அந்நிறுவனத்தின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார்.
அதற்கு அனுப்பிய பதிலில் US Pizza Malaysia, மலேசியாவின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகத் திகழும் பத்து மலை முருகனை முன்னிலைப்படுத்தவும், இந்நாட்டின் பன்முகக் கலாச்சாரத் தன்மையை கௌரவிக்கும் வகையிலேயே, அந்த மெர்டேக்டா பொட்டல பதிப்பில் முருகனின் படம் பொறிக்கப்பட்டதாகக் கூறியது.
மற்றபடி, இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் எந்தவொரு தீங்கான நோக்கமும் தங்களுக்கு இல்லை என, US Pizza Malaysia தெளிவுப்படுத்தியது.
என்றபோதிலும், மலேசிய இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சர்ச்சையான அந்த வடிவமைப்பை உடனடியாக நிறுத்துவதோடு, பொட்டலங்களை மீட்டுக் கொள்ளவும் அது முடிவெடுத்துள்ளது.
இதனை வரவேற்ற டத்தோ சிவகுமார், இத்தோடு இவ்விவகாரம் ஒரு முடிவுக்கு வருவதாக சொன்னார்.
US Pizza Malaysia-வின் அச்செயல் இந்துக் கடவுளை சிறுமைப்படுத்துவதாகக் கூறி பல்வேறு இந்து அமைப்புகள் முன்னதாகக் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



