
மூவார், அக்டோபர் 30 –
மூவார், அக்டோபர் 30 – நேற்று இரவு, மூவார் சுங்கை அபோங் பாக்ரி பைபாஸ் (Sungai Abong-Bakri bypass) சாலையில்,எதிர் திசையிலிருந்து வந்துக் கொண்டிருந்த கார் ஒன்று மோதியதில், 73 வயதான பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
‘டொயோட்டா வியோஸ்’ வாகன ஓட்டுநர் எதிர் வழியில் தவறாக நுழைந்து, எதிரே வந்துக் கொண்டிருந்த ஹோண்டா சிட்டி காருடன் மோதியதில், வியோஸ் காரில் பின்புறம் அமர்ந்திருந்த 73 வயதான மூதாட்டிக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ரைஸ் முக்லிஸ் அஸ்மான் அசிஸ் (Raiz Mukhliz Azman Aziz) தெரிவித்தார்.
ஹோண்டா சிட்டி வாகனத்தில் அமர்ந்திருந்த பயணி உட்பட 2 வாகன ஓட்டுனர்களும் சிறிய காயங்களுக்கு மட்டுமே ஆளாகியதாகவும், அவர்கள் அருகாமையிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர் என்றும் அறியப்படுகின்றது.
போலீசார் மேற்கொண்ட பரிசோதனையில் வியோஸ் கார் ஓட்டுநர் மதுபானம் அல்லது போதைப்பொருட்கள் ஏதும் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், குறைந்தது 5 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 20,000 முதல் 50,000 ரிங்கிட் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்த விபத்தை நேரில் பார்த்த சாட்சிகள் உடனடியாக காவல்துறையை அணுக வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டனர்.



