
புது டெல்லி, பிப்ரவரி-6-இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இரு-நாள் மலேசியப் பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், சர்ச்சைக்குரிய மத போதகர் Dr சாக்கிர் நாயக் நாடுகடத்தலும் மீண்டும் முக்கிய விவாதமாகிறது.
இப்பயணம், இருவழி வாணிபம், தற்காப்பு, செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் உறவை மேம்படுத்துவதை முக்கியக் நோக்கமாகக் கொண்டாலும் சாக்கிர் நாயக் குறித்தும் பேசப்படும்.
ஏற்கனவே பல சந்திப்புகளில் இந்தியா அதனை வலியுறுத்தியுள்ளது; இம்முறை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடனான சந்திப்பிலும் அதனை எழுப்புவோம் என, இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் பி. குமரன் கூறினார்.
“மலேசியாவிடமிருந்து நாங்கள் எதிர்பார்க்கும் பதில் கிடைக்கும்” என நம்புவதாக, மோடி தலைமையிலான பேராளர் குழு மலேசியா புறப்படும் முன் புதுடெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த குமரன் அவ்வாறு சொன்னார்.
“அனைத்து சட்ட நடைமுறைகள் முடியும் வரை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்துவோம்” என்றார் அவர்.
2016 முதல் மலேசியாவில் வசிக்கும் நாயக் மீது இந்தியாவில் பணமோசடி மற்றும் வெறுப்பு பேச்சுகளைத் தூண்டியதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.
இதனால், வழக்குகளை எதிர்கொள்ள அவரை நாடுகடத்துமாறு இந்தியா தொடர்ந்து மலேசியாவை வலியுறுத்தி வருகிறது.
மலேசியா இதற்கு முன் எச்சரிக்கையுடன் நடந்துகொண்டாலும், இந்த முறை மோடி-அன்வார் சந்திப்பில் முன்னேற்றம் ஏற்படுமா என்பது கூர்ந்து கவனிக்கப்படும்.
சாக்கிர் நாயக் விவகாரம் இந்திய–மலேசிய உறவுக்கு ஒரு சோதனையாக மாறுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.



