
வாஷிங்டன், ஜூலை-15- யுக்ரேய்னுடனான போரை 50 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வருமாறு, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் ரஷ்யாவுக்குக் காலக்கெடு விதித்துள்ளார்.
தவறினால், மாபெரும் புதியப் பொருளாதாரத் தடைகளை மோஸ்கோ சந்திக்க வேண்டியிருக்கும் என அவர் மிரட்டினார்.
யுக்ரேய்ன் விஷயத்தில் ரஷ்யாவின் போக்கு உண்மையிலேயே அதிருப்தி அளிக்கிறது. எனவே ரஷ்ய பொருட்களுக்கு 100 விழுக்காடு வரையிலான வரி பாயுமென ட்ரம்ப் கோடி காட்டினார்.
ஏற்கனவே மேற்கத்திய நாடுகளின் பல்வேறு தடைகளால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்யாவை முற்றாக முடக்குவதே ட்ரம்ப்பின் திட்டம் என்பது இதன் வழி தெளிவாகத் தெரிகிறது.
இவ்வேளையில், யுக்ரேய்னுக்கு பேரளவிலான ஆயுதங்களைத் தருவிக்கும் ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் முழு வீச்சில் மேற்கொண்டு வருகிறார்.
நாட்டோ இராணுவக் கூட்டமைப்பின் ஒத்துழைப்பின் கீழ் அவ்வொப்பந்தம் வரையப்பட்டு வருகிறது.
இரண்டாம் தவணையாக அதிபரான 24 மணி நேரங்களில் ரஷ்யா – யுக்ரேய்ன் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என ட்ரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தில் வாக்குறுதி அளிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.