
பத்து பஹாட், அக்டோபர் 23 – நேற்று நள்ளிரவு,வடக்கு தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கிலோ மீட்டர் 78.7 இல் பயணித்த, எக்ஸ்பிரஸ் பேருந்து ஒன்று லாரியின் பின்புறத்தை மோதியதையடுத்து தீப்பிடித்து எரிந்தது.
அதில் இருந்த ஒன்பது பயணிகள் மற்றும் பேருந்து ஓட்டுநர் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர் என்று பத்து பஹாட் மாவட்ட போலீஸ் தலைவர் ஷாருலனுவார் முஷாடாட் அப்துல்லா சானி (Shahrulanuar Mushaddat Abdullah Sani) தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான பேருந்து ஜோகூர் பாருவின் லார்கின் சென்ட்ரல் நிலையத்திலிருந்து கோலாலம்பூர் நோக்கி பயணித்து கொண்டிருந்தபோது, பேருந்து ஓட்டுநர் லாரியை தவிர்க்க முடியாமல் அதன் பின்புறத்தை மோதியதாகக் கூறப்படுகிறது.
மோதலின் தாக்கத்தால் பேருந்து சம்பவ இடத்திலேயே தீப்பற்றினாலும், லாரி ஓட்டுநர் உட்பட யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தீப்பிடிப்பு ஏற்படும் முன், பேருந்து ஓட்டுநரும் பயணிகளும் வாகனத்திலிருந்து விரைவாக வெளியேறி தங்களைப் பாதுகாத்துக்கொண்டனர்.
இச்சம்பவம் சாலைப் போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதோடு “கவனக்குறைவாக அல்லது பொறுப்பில்லாமல் ஓட்டுதல்” எனும் குற்றப்பிரிவின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதென்று போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.