லிப்பீஸில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி 20 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததில், ஓட்டுநர் பலி

லிப்பீஸ், அக்டோபர் 31 –
நேற்று, லிப்பீஸ் சுங்கை கோயான் அருகேயுள்ள ஜெலாய் வனக்காப்பகத்தில் மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று சாலையை விட்டு விலகி 20 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததில், அந்த லாரியின் ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.
40 வயது மதிக்கத்தக்க, மியான்மார் நாட்டைச் சேர்ந்த அந்த ஓட்டுநர் வளைவு சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால், லாரி சாலையின் வலது பக்கம் விலகி பள்ளத்தில் விழுந்தது என்று லிப்பீஸ் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி அஸ்லி முகமட் நூர் (Superintenden Azli Mohd. Noor ) தெரிவித்தார்.
விபத்தில் சிக்கி கடுமையாக காயமடைந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பபட்டது.
இந்த வழக்கு குற்றச் சட்டத்தின் அடிப்படையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், விபத்திற்கான முக்கிய காரணம் ஓட்டுனரின் கவனக்குறைவே என்று போலீசார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.



