
ஜியோர்ஜ்டவுன், அக்டோபர்-25, வட்டி முதலைகளால் விபச்சாரத் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்பட்டதாக கட்டுக்கதையை கிளப்பிய பெண் பாதுகாவலருக்கு, 4,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பினாங்கு, ஜியோர்ஜ்டவுன் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அக்குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, 26 வயது Wan Ainsyatul Mime Wan Yuszaidi-க்கு நீதிபதி அத்தண்டனையை வழங்கினார்.
அபராதத் தொகையை செலுத்தாவிட்டால், 9 மாத சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டியிருக்குமென்றும் நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக டிக் டோக் podcast-டில் பேசிய அப்பெண், along கும்பலால் சிவப்பு விளக்குப் பகுதியில் சம்பளமில்லாமல் தான் வேலை வாங்கப்பட்டதாகக் கூறியிருந்தார்.
தந்தை வட்டிக்கு வாங்கிய 20,000 ரிங்கிட் பணத்தைச் செலுத்த முடியாத காரணத்தால், கடந்த பிப்ரவரி முதல் வட்டி முதலையின் வைப்பாட்டியாக சம்பளமில்லாமல் வேலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவர் கூறிக்கொண்டார்.
எனினும் அப்பெண்ணின் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது.
தனது உள்ளக்கிடங்கை கொட்டுவதற்காக அவர் கற்பனையாக உருவாக்கிய கதையே அது என்பது அம்பலமானது.