
கோலாலம்பூர், மே-13 – வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் சாலை வேகத் தடுப்புகளைப் பொருத்துமாறு, விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான WWF அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
பேராக், கெரிக் அருகே கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் ஒரு குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, இப்பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது.
விலங்குகள் நடமாட்டமுள்ள பகுதிகளை நெருங்கும் போது வேகத்தைக் குறைக்குமாறு வைக்கப்பட்டுள்ள நினைவுறுத்தல் பலகைகள் விபத்துகளைக் குறைக்க போதுமானதாக இல்லை.
எனவே, வேறு சில அதிரடி நடவடிக்கைகள் தேவை.
எனவே சாலைகளில் வேகத் தடுப்புகளைப் பொருத்துவது இன்னும் ஆக்ககர பலனைத் தருமென WWF கூறியது.
வனவிலங்குகளின் உயிர்களைக் காப்பாற்றுவதோடு, வாகனமோட்டிகளின் பாதுகாப்பைபும் இது உறுதிச் செய்யுமென அது சுட்டிக் காட்டியது.
2020 -ஆம் ஆண்டு முதல் நாட்டில் 2,361 வனவிலங்குகள் சாலைகளில் வாகனங்கள் மோதி உயிரிழந்துள்ளன.
ஆக அதிகமாக பஹாங்கில் 765 வனவிலங்குள் மடிந்தன; அதற்கடுத்த நிலையில் பேராக்கில் 478 விலங்குகள் உயிரிழந்ததாக, இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அவற்றில் 8 சம்பவங்கள் யானைகளை உட்படுத்தியவை; இதே காலக்கட்டத்தில் 5 மலாயாப் புலிகளும் சாலை விபத்தில் மடிந்துள்ளதாக அவர் சொன்னார்.
மே 11-ஆம் தேதி கெரிக்கில் குட்டி யானை டிரேய்லர் லாரியால் மோதப்பட்டு உயிரிழந்து, அதன் வேதனை தாங்காமல் தாய் யானை மணிக்கணக்காக ஒரு அடி கூட நகராமல் அங்கேயே காத்திருந்த சம்பவம் முன்னதாக வைரலானது.
அன்னையர் தினத்தில் நிகழ்ந்த அச்சம்பவம் மலேசியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இனியும் வனவிலங்குகளின் உயிர் இப்படி பரிதாபமாகப் போகக் கூடாது என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.