
ஜோகூர் பாரு, அக்டோபர்-11,
ஜோகூரில் வார இறுதி விடுமுறை நாட்கள் வெள்ளி, சனிக்கிழமைகளிலிருந்து மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கு மாற்றப்பட்டிருப்பதை, இனியும் யாரும் அரசியலாக்க வேண்டாமென, மாநில மந்திரி பெசார் கேட்டுக் கொண்டுள்ளார்.
தேவையற்ற கருத்துகள் நிலைமையை மோசமாக்கி ஒற்றுமையை சீர்குலைத்து விடுமென டத்தோ ஓன் ஹாஃபிஸ் கா’சி (Datuk Onn Hafiz Ghazi) கூறினார்.
மாநில அரசால் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் மக்களின் நலனையே முன்னிறுத்தும்.
எனவே அரசியல் ஆதாயங்களுக்காக வீண் சர்சைகளை எழுப்ப வேண்டாமென அவர் அறிவுத்தினார்.
விடுமுறை நாள் மாற்றப்பட்டிருப்பதால் வெள்ளிக்கிழமைத் தொழுகைக்கு எந்த பங்கமும் வராது என்பது, மாநில முஃப்தியுடனான கலந்தாய்விலும் உறுதிச் செய்யப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
சில அரசியல் தலைவர்கள் அவ்விவகாரம் குறித்து கேள்வியெழுப்பியது தொடர்பில் டத்தோ ஓன் கருத்துரைத்தார்.
குடும்பத்தோடும் பிள்ளைகளோடும் மேலதிக நேரத்தைச் செலவிட வேண்டும் என்ற மாநில மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றவே, வார இறுதி விடுமுறை மீண்டும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளுக்கே திரும்புவதாக ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் நேற்று கூறியிருந்தார்.
அது பிடிக்காதவர்கள் வேறு மாநிலங்களுக்கு மாறிச் செல்லலாமென்றும் அவர் சிலேடையாகக் கூறினார்.