“விமர்சனங்கள் வந்தாலும் பரவாயில்லை; குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம்” – லோக்

புத்ராஜெயா, செப்டம்பர் -30,
குழந்தைகள் வாகனத்தில் பயணிக்கும் போது பாதுகாப்புக் இருக்கையைப் (Child Safety Seat) பயன்படுத்துவது அவசியம் என்ற தனது கருத்தை, பொதுமக்கள் விமர்சித்தாலும், தனக்கு கவலை இல்லை என்றும் மாறாக குழந்தைகளின் பாதுகாப்புதான் முக்கியம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்தோனி லோக் மீண்டும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்கள் வாகன இருக்கையில் கட்டாயம் அமர்த்தப்பட வேண்டும் என்பதில் தனது நிலைப்பாடு உறுதியாக உள்ளது என்பதனையும் குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமையன்று புக்கிட் காஜாங் பிளாசா டோல் அருகே நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில், பாதுகாப்பு இருக்கை இல்லாமல் பயணித்த ஒரு வயது குழந்தை வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, மற்றொரு காரின் கீழ் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
அந்த விபத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் என்றும் அதில் ஒரு லாரி, இரண்டு SUV கார்கள் மற்றும் மேலும் மற்றொரு கார் சம்பந்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்ட லோக், தான் குழந்தையின் பெற்றோர்களைக் குற்றம் சாட்டவில்லை என்றும் ஆனால் இத்தகைய அசம்பாவித சம்பங்கள்தான் பாதுகாப்பு இருக்கைகள் வாகனத்தில் எவ்வளவு முக்கியம் என்பதை நினைவூட்டுகின்றன என்றும் தெரிவித்தார்