
கோலாலம்பூர், பிப்ரவரி-24 – இவ்வாண்டு நாட்டில் ஏற்படவிருக்கும் வெப்பம் மற்றும் வறண்ட வானிலை கடந்தாண்டு அளவுக்கு மோசமாக இருக்காது.
மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையான MET Malaysia அதனைத் தெரிவித்துள்ளது.
தற்போது நிகழும் La Nina வானிலையின் தாக்கமே அதற்கு காரணம்; இந்நிலை இவ்வாண்டு மத்தி வரை தொடருமென எதிர்பார்க்கப்படுவதாக, அத்துறையின் தலைமை இயக்குநர் Dr மொஹமட் ஹிஷாம் மொஹமட் அனிப் கூறினார்.
இவ்வேளையில், புகை மூட்டம் மற்றும் வெப்பப் புள்ளிகள் குறித்து கருத்துரைத்த அவர், தென்மேற்குப் பருவ மழைக் காலத்தின் உச்சக்கட்டமான ஜூலை முதல் செப்டம்பர் வரையில் அவை நிகழுமென்றார்.
என்றாலும், புகைமூட்டம் மற்றும் வெப்பப் புள்ளிகள் ஏற்படுவதற்கான சாத்தியங்களை இப்போதே அறுதியிட்டு கூற இயலாது; காரணம், தென்மேற்குப் பருவ மழையின் கடுமை மற்றும் அண்டை நாடுகளின் வானிலையையும் பொருத்தே அது அமையுமென Dr ஹிஷாம் விளக்கினார்.
அக்காலக்கட்டத்தில் அண்டை நாடுகளில் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகள் மோசமானால், அதன் கரும்புகை மலேசியாவைப் பாதித்து புகை மூட்ட பிரச்னையை ஏற்படுத்தும்.
இவ்வேளையில் வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் முடிவுக்கு வந்ததும், வானிலை மாற்றம் மார்ச் மத்தியில் ஏற்படுமென்றார் அவர்.
இரமலான் நோன்பு மாதத்தில், நாடு முழுவதும் காலையில் வானிலை நன்றாகவும், மாலை மற்றும் இரவில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பலத்த காற்றும் வீடுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக தீபகற்ப மலேசியாவின் மேற்கு மற்றும் உட்புறப் பகுதிகளில் அந்நிலைக் காணப்படும்.
அதே சமயம், பேராக், பஹாங், கிளந்தான் உள்ளிட்ட மாநிலங்களில் மற்ற இடங்களை விட சற்று வெப்பமாகவும் வறண்டும் காணப்படுமென அவர் சொன்னார்.