
கோத்தா கினாபாலு, நவம்பர்-15, 17-ஆவது சபா சட்டமன்றத் தேர்தல் எதிர்பார்த்தபடியே பல்முனைப் போட்டிகளால் களைக் கட்டுகிறது.
இன்று காலை 25 மையங்களில் 9 மணிக்குத் தொடங்கி 1 மணி நேரம் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்றது.
11 மணிக்குப் பிறகு தேர்தல் ஆணையமான SPR வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த நிலையில், அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் Tulid தொகுதியில் 14 பேர் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் அறுவர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர்.
Bandau, Tamparuli, Inanam, Kapayan ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளில் 13 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.
2 தொகுதிகளில் 12 முனைப் போட்டியும், 6 தொகுதிகளில் 11 முனைப் போட்டியும், 9 தொகுதிகளில் 10 முனைப் போட்டியும் ஏற்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 73 தொகுதிகளில் ஒன்றில் கூட நேரடிப் போட்டி கிடையாது.
596 வேட்பாளர்களில் 80 பேர் 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.
81 முதல் 99 வயதிலான 2 பேரும் போட்டியில் குதித்துள்ளனர்.
பாலின வாரியான பார்த்தால் 71 பேர் மட்டும் பெண் வேட்பாளர்கள்; எஞ்சிய 525 பேரும் ஆண்கள் ஆவர்.
இம்முறை பக்காத்தான் ஹராப்பான் – தேசிய முன்னணி ஓரணியிலும், முதல்வர் டத்தோ ஸ்ரீ ஹஜிஜி நூர் தலைமையிலான GRS கூட்டணி ஓரணியிலும், பெரிக்காத்தான் நேஷனல் இன்னோர் அணியிலும், வாரிசான் கட்சி ஓரணியிலும் பிரதான கட்சிகளாகப் போட்டியிடுகின்றன.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியைக் கைப்பற்ற கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஆட்சியைமைக்க ஒரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ குறைந்தது 37 இடங்கள் தேவையாகும்.
இன்று தொடங்கும் 14-நாள் பிரச்சாரங்கள் ஓய்ந்து, நவம்பர் 29-ஆம் தேதில் சபா மக்கள் தேர்தலில் வாக்களிப்பர்.



