
கோலாலம்பூர், ஆகஸ்ட்-2 – வேலை வாய்ப்புகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு விடும் விளம்பரங்களில் இனப்பாகுபாடு நீடிப்பதை எதிர்த்து குரல் கொடுத்துள்ள, புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரஷிட்டின் துணிச்சல் பாராட்டுக்குரியது.
மஹிமா எனப்படும் மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையின் தலைவர் டத்தோ என். சிவகுமார் அவ்வாறு கூறியுள்ளார்.
இன்னாருக்கு மட்டுமே வேலை என இனங்களைக் குறிப்பிட்டு வேலை வாய்ப்புகள் விளம்பரம் செய்யப்படுகின்றன; இதனால் போதியத் தகுதியும் திறமையும் இருந்தும், இன அடையாளம் காரணமாக பலர் புறக்கணிக்கப்படுகின்றனர்.
வாடகைக்கு வீடுகளை விடுபவர்களும் ‘குறிப்பிட்ட இனங்களுக்கு மட்டுமே’ என விளம்பரம் செய்கின்றனர்; இதில் அப்பட்டமாக இந்தியர்கள் ஒதுக்கப்படுவது ஊரறிந்த விஷயம்.
இது நீண்ட காலமாகவே நிலவும் பிரச்னை என்றாலும், இதைப் பற்றி மக்கள் பிரதிநிதிகள் பெரும்பாலும் வாய் திறப்பதில்லை.
அப்படியிருக்க, ஷெர்லீனாவின் தைரியம் மகிழ்ச்சியளிக்கிறது.
அதே சமயம், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் இவ்விவகாரத்தை ஷெர்லீனா அங்கு எழுப்புவது இன்னும் ஆக்கப்பூர்வமானதாக இருக்கும்.
ஆட்சியிலிருப்பதும் அவர் சார்ந்த கட்சி தான் என்பதால், இதே துணிச்சல் நாடாளுமன்றத்திலும் ஓங்கி ஒலிக்க வேண்டுமென சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
அதன் மூலம் இது போன்ற இனப்பாகுபாட்டைத் தடுக்க விரைவிலேயே உரிய சட்டம் இயற்றப்பட வேண்டும்; அப்போது தான் அநீதியைத் தடுக்க முடியுமென அறிக்கையொன்றில் சிவகுமார் வலியுறுத்தினார்.
வீடுகளை வாடகைக்கு விடும்போதோ, வேலை வாய்ப்புகளை விளம்பரம் செய்யும் போதோ, இனப்பாகுபாடு காட்டப்படுவதை மலேசியர்கள் இனியும் அனுமதிக்கக் கூடாது என, முன்னதாக வணக்கம் மலேசியாவுக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில், ஷெர்லீனா வலியுறுத்தினார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டில் இது பிரிவினைவாதத்தைத் தூண்டி விடும் என்ற ஷெர்லீனாவின் கருத்துக்கு பெரும் வரவேற்புக் கிடைத்துள்ளது.