ஷா ஆலாம், டிசம்பர்-10, சிலாங்கூர், ஷா ஆலாமில் வாடிக்கையாளர் போல் கைப்பேசி கடைக்குள் நுழைந்த ஆடவன் கைப்பேசியைத் திருடிக் கொண்டு ஓடியதால், கடை உரிமையாளருக்கு 600 ரிங்கிட் நட்டமேற்பட்டது.
வைரலான அச்சம்பவம், செக்ஷன் 25, தாமான்ஸ்ரீ மூடாவில் டிசம்பர் 4-ம் தேதி நிகழ்ந்ததாக, மாவட்ட போலீஸ் தலைவர் துணை ஆணையர் மொஹமட் இக்பால் இப்ராஹிம் (Mohd Iqbal Ibrahim) கூறினார்.
கைப்பேசியை வாங்க ஆர்வம் காட்டியவனிடம், கடைப் பணியாளர் பெட்டியைப் பிரித்து காட்ட முற்பட்ட போது, சட்டென கைப்பேசியைக் கைப்பற்றி அவன் ஓட்டம் பிடித்தான்.
வெளியில் காத்திருந்த நண்பனுடன் சந்தேக நபர் தப்பியோடிய வீடியோ வைரலாகியுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் அத்திருட்டு விசாரிக்கப்படுகிறது.
அச்சம்பவம் குறித்து தகவல் இருந்தால், போலீசைத் தொடர்புகொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.