
கோலாலம்பூர், ஆகஸ்ட் -14 – கோலாலம்பூர் ஸ்ரீ பெட்டாலிங்கில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த spa எனப்படும் ஆரோக்கிய நீரூற்று மையத்தில், வெளிநாட்டு ஆடவர்களான 5 உடம்பு பிடி பணியாளர்கள் கைதாகினர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில் அவர்கள் கைதுச் செய்யப்பட்டனர்.
அவர்களில் நால்வர் மியன்மார் நாட்டவர்கள், இன்னொருவர் தாய்லாந்து பிரஜை ஆவார்.
மியன்மார் நாட்டவர்களிடம் முறையான பயணப் பத்திரம் எதுவும் இல்லை; தாய்லாந்து நாட்டவர் PLS எனும் சமூகப் பயண பெர்மிட்டில் வந்துள்ளார்.
இதையடுத்து குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட ஏதுவாக அந்த ஐவரும் புத்ராஜெயா குடிநுழைவுத் தடுப்பு முகாமுக்குக் கொண்டுச் செல்லப்பட்டனர்.
விசாரணைக்கு வருமாறு இரு உள்ளூர் ஆடவர்களுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு மணிக்கு 109 ரிங்கிட் கட்டணத்தில் ஆண் வாடிக்கையாளர்களைக் குறி வைத்து இந்த spa மையம் செயல்பட்டு வந்துள்ளது.