
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-28 – பினாங்கு ஜோர்ஜ்டவுனில் 7 நாட்களாக வில்லா கெஜோரா அடுக்குமாடி கூரையில் சிக்கித் தவித்த ‘ஹீரோ’ என்ற தெருநாய், இன்று அதிகாலை கனமழையில் சறுக்கி 17-ஆம் மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தது.
இத்துயர முடிவு, ஒரு வாரமாக உணவு, தண்ணீர் கொடுத்து, பாதுகாப்பான பாதைகள் அமைத்தும், கூண்டை அமைத்தும் ‘ஹீரோவை’ காப்பாற்ற போராடிய தீயணைப்பு – மீட்புத் துறையினர், 4PAWS, IAPWA ஆகிய விலங்கு நல அமைப்புகள், பினாங்கு மாநகர மன்றம், பாதுகாப்பு படையினர் மற்றும் பல விலங்கு நல ஆர்வலர்களைக் கவலையில் ஆழ்த்தியது.
கூரையின் உச்சியில் காணப்பட்ட நாளிலிருந்து அந்நாயை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும், அச்சத்தால் ‘ஹீரோ’ மீட்புக் குழுவினரை நெருங்கவில்லை.
“ஹீரோ விழுந்துவிட்டான்… எங்கள் முயற்சி தோல்வியடைந்தது. மன்னிக்கவும்.” என மீட்புக் குழுவைச் சேர்ந்த டேவிட் யிம் (David Yim) என்பவர் கண்கலங்கிக் கூறினார்.
பெயரில் மட்டும் ‘ஹீரோவாக’ இல்லாமல் செயலிலும் தைரியமான வலம் வந்த இந்த தெருநாய்… இப்போது துயரமான நினைவாகியுள்ளது.
என்றும் நினைவில் நிற்குமென…விலங்கின ஆர்வலர்களும் குடியிருப்பாளர்களும் வேதனையுடன் கூறினர்.