
புது டெல்லி, ஜூலை -23- ஹோங் கோங்கிலிருந்து இந்தியாவின் புது டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
AI321 அவ்விமானம் 100 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் நேற்று மாலை புது டெல்லி விமான நிலையம் வந்திறங்கியது.
பயணிகள், விமானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, அதன் வால் பகுதியின் ஜெனரேட்டரில் திடீரென தீ ஏற்பட்டு புகை வெளியானது.
உடனடியாக கணினி இயக்கம் மூலம் ஜெனரேட்டர் மூடப்பட்டு, தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
தீயில், விமானத்தின் சில பாகங்கள் சேதமடைந்தன; என்றாலும் பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ஒருவேளை நடுவானில் தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பெருமளவில் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கக் கூடுமென தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக திங்கட்கிழமை மும்பையில் கனமழையில் தரையிறங்கும் போது ஏர் இந்தியா ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அதன் இயந்திரங்களில் ஒன்றின் அடிப்பகுதியில் சேதம் ஏற்பட்டது.
ஜூன் மாதம் குஜராத், அஹமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்திலிருந்த 241 பேர் உட்பட மொத்தம் 275 பேர் பலியாயினர்.
ஏர் இந்தியா விமானங்கள் அடுத்தடுத்து இதுபோன்ற விபத்துகளில் சிக்குவது பயணிகளிடையே பீதியை கிளப்பியுள்ளது.