சென்னை, நவம்பர்-30, ஃபெஞ்சல் (fengal) புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணி (மலேசிய நேரம் இரவு 7.30) வரை எந்த விமானமும் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலையில் விமானங்களை இயக்குவது சிக்கலில் முடியலாம் என்ற பாதுகாப்புக் காரணங்களுக்காக, அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புயலின் எதிரொலியாக சென்னைக்கு வரும் விமானங்களும் சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களும் இரத்துச் செய்யப்படுவதாக விமான நிறுவனங்கள் அறிவித்து வந்த நிலையில், தற்போது விமான நிலையமே மூடப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் (மலேசிய நேரம் மாலை 5 மணி) புயலாக மாறி சென்னை அருகே கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக் கொட்டித் தீர்க்குமென்றும், எனவே பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னையில் நள்ளிரவு முதலே கனழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களில் இரயில் சேவைகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.