அசாமில் பிரியாவிடை பெயரில் மாணவர்கள் அடாவடி; களேபரமான பள்ளிக் கூடம்

அசாம், ஜனவரி-30 இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 10-ஆம் வகுப்பு மாணவர்களின் பிரியாவிடை சந்திப்பு, பள்ளி சொத்துக்களைச் சேதப்படுத்தும் அளவுக்கு எல்லை மீறி வைரலாகியுள்ளது.
வகுப்பறை மின்விசிறிகளை மடக்கி, கரும்பலகையை பெயர்த்தெடுத்து, நாற்காலி மேசைகளை உடைத்து மாணவர்கள் பெரும் களேபரம் செய்திருக்கின்றனர்.
அதிலும் ஒருவன் நாற்காலி மீதேறி, எரிந்துகொண்டிருக்கும் குண்டு பல்ப்பை எக்கி பறித்து விட்டான்; அவனுக்கு கொஞ்சமும் சளைக்காத சக மாணவி அந்த பல்ப்பை வாங்கி தரையில் போட்டுடைத்தாள்.
முதலுதவி சிகிச்சைப் பெட்டி போல் தெரியும் வெள்ளைப் பெட்டியையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.
அதையும் கழற்றி கீழே போட்டு சந்தோஷத்தில் காலால் மிதிக்கின்றனர்.
வீடியோ வைரலாகி இந்திய வலைத்தளவாசிகள் மத்தியில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.
மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளனர்.
விஷயம் பெரிதானதை அடுத்து அதிகாரிகள் அச்சம்பவத்தை விசாரித்து வருகின்றனர்.