
அசாம் பாக்கி RM17.7 மில்லியன் பங்குச் சர்ச்சை: Bloomberg மீது புக்கிட் அமான் விசாரணை
கோலாலம்பூர், பிப்ரவரி-14,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யின் தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி குறித்து அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி, புக்கிட் அமானின் இரகசியக் குற்றப்பிரிவு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
கிரிமினல் அவதூறு பரப்பியது மற்றும் இணையத்தைத் தவறாகப் பயன்படுத்தியது ஆகிய கோணங்களில் விசாரணை நடைபெறுகிறது.
Bloomberg வெளியிட்ட செய்தியில், அசாம் பாக்கி Velocity Capital Berhad நிறுவனத்தில் RM17.7 மில்லியன் பங்குகளை வைத்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இது 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்ட அரசுப் பணியாளர் விதிகளை மீறுவதாக அதில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஆனால் குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த அசாம் பாக்கி, தன்னிடம் தற்போது எந்த பங்குகளும் இல்லை எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து Bloomberg மீது RM100 மில்லியன் இழப்பீடு கோரி சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார்.
Bloomberg-கோ, தனது செய்தி உண்மையென உறுதியாக நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
இதற்கிடையில், அக்குற்றச்சாட்டை விசாரிக்க அரசாங்கம் ஒரு சிறப்பு பணிக் குழுவை அமைத்துள்ளது.
சட்டத் துறைத் தலைவர் Dusuki Mokhtar தலைமையில், கருவூல தலைமைச் செயலாளர் Johan Mahmood Merican மற்றும் பொது சேவை தலைமை இயக்குநர் Wan Ahmad Dahlan Abdul Aziz ஆகியோர் அக்குழுவில் உள்ளதாக, அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ Shamsul Azro Abu Bakar தெரிவித்தார்.
இந்தக் குழு விரிவான விசாரணை நடத்தி, பிரதமருக்கு அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.
பிரதமர் அன்வார் இப்ராஹிம், பணிக் குழுவின் முடிவுகளுக்கு காத்திருந்து பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
ஆக தற்போது, இரண்டு விசாரணைகள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன: ஒன்று Bloomberg மீதான போலீஸ் விசாரணை, மற்றொன்று அசாம் பாக்கியின் பங்குகள் குறித்த அரசாங்கத்தின் சிறப்புப் பணிக் குழு விசாரணை.
இந்த இரண்டின் முடிவுகள், சர்ச்சை எவ்வாறு முடிவடைகிறது என்பதை தீர்மானிக்கும்…



