
கோலாலம்பூர், ஜனவரி-22-PN எனப்படும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் அடுத்த தலைவராக, அதன் உறுப்புக் கட்சிகளில் தலைவராக இருப்பவர் ஒருவரே வர வேண்டும்.
ஜனவரி 1-ஆம் தேதி அப்பதவியிலிருந்து விலகிய தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அவ்வாறு கூறியுள்ளார்.
தற்போது PN-ல் 4 உறுப்புக் கட்சிகள் உள்ளன; அவற்றில், பெர்சாத்து கட்சியின் தலைவரான முஹிடின், பாஸ் கட்சியின் தலைவராக தான் ஸ்ரீ அப்துல் ஹடி அவாங், கெராக்கான் கட்சியின் தலைவராக டத்தோ டோமினிக் லாவ் மற்றும் மலேசிய இந்திய மக்கள் கட்சியான MIPP தலைவராக பி. புனிதன் ஆகியோர் உள்ளனர்.
இப்போது முஹிடின் பதவியில் இல்லை; ஹாடி அவாங்கும் உடல்நிலை காரணமாக அப்பொறுப்பை ஏற்க முடியாது எனத் தெரிவித்து விட்டார்.
இது PN-க்கு சற்று சிக்கலை ஏற்படுத்தினாலும், கூட்டணியின் நீண்டகால நிலைத்தன்மைக்கான சரியான தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம் என முஹிடின் வலியுறுத்தினார்.
இவ்வேளையி, PN நிர்வாகத்தை வலுப்படுத்தும் விதமாக அதன் அரசியல் அமைப்பில் சில மாற்றங்களை முன்மொழியவிருப்பதாகவும் கூறிய முஹிடின், 16-ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தானின் poster boy அதாவது பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் முடிவு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றார்.
என்னதான் பெர்சாத்து தம்மை பிரதமர் வேட்பாளராக அறிவித்திருந்தாலும், அது வெறும் பரிந்துரை மட்டுமே; மற்ற உறுப்புக் கட்சிகளும் இணைந்து முடிவு செய்ய வேண்டிய விஷயம் அதுவென அவர் சொன்னார்.



