
கோலாலம்பூர், நவம்பர்-23 – வரும் நாட்களில் அடைமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பேரிடரை எதிர்கொள்ள முழுத் தயார் நிலையில் இருக்குமாறு 6 மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
கிளந்தானில் தும்பாட், பாசீர் மாஸ், கோத்தா பாரு, பாச்சோக் உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை திங்கட்கிழமை வரை அடைமழைப் பெய்யும் என மலேசிய வானிலை ஆரய்ச்சித் துறை கணித்துள்ளது.
ஜெலி, தானா மேரா, மாச்சாங், குவா மூசாங் போன்ற மாவட்டங்களுக்கு நவம்பர் 26 வரை கனழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அதே போல், பெர்லிஸ், கெடா, பினாங்கு, திரங்கானு ஆகிய மாநிலங்களும் எச்சரிக்கைத் தரப்பட்டுள்ளது.
இவ்வேளையில் பேராக்கில் கெரியான், லாருட்-மாத்தாங்-செலாமா, குவாலா கங்சார், உலு பேராக் போன்ற இடங்களிலும் நாளை வரை கனமழை பெய்யும்.
எனவே, மாநில-மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுக்கள் உடனடி தயார் நிலையில் இறங்க வேண்டும் என, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனமான NADMA உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக வெள்ளம், நிலச்சரிவு ஏற்படும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் தற்காலிக நிவாரண மையங்களைத் தயார்படுத்துவதுடன், அத்தியாவசியப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பதையும் உறுதிச் செய்யுமாறு அவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.



