
வாஷிங்டன், பிப்ரவரி-20-அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப், புதிய அணு ஒப்பந்தத்தை ஏற்பதற்காக ஈரானுக்கு 10 நாட்கள் காலக்கெடு விதித்துள்ளதை அடுத்து, அமெரிக்கா – ஈரான் இடையேயான பதற்றம் தீவிரமடைந்துள்ளது.
ஈரான் தனது அணு திட்டத்தில் முக்கிய கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும், இல்லையேல் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.
தேவைப்பட்டால் இராணுவ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என்றார் அவர்.
இதனிடையே, அமெரிக்கா மத்திய கிழக்கில் தனது இராணுவ இருப்பை திடீரென அதிகரித்துள்ளது.
விமானம் தாங்கி கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு முறைகளும் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஈரானை அடிபணிய வைக்க வாஷிங்டன் மேற்கொள்ளும் அச்சுறுத்தலாகவே இது பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலளித்துள்ள ஈரானோ, பேச்சுவார்த்தையை தொடரத் தாங்கள் தயாராக இருப்பதாகவும், ஆனால் எந்த தாக்குதலுக்கும் தக்க பதிலடி தருவோம் என்றும் எச்சரித்துள்ளது.
மத்தியக் கிழக்கில் பதற்றம் அதிகரித்து, உலகலாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படுமோ என்ற கவலையில், உலக நாடுகள் அமைதியை வலியுறுத்தி வருகின்றன.
இந்த நெருக்கடி பேச்சுவார்த்தையால் தீருமா அல்லது பெரும் மோதலாக மாறுமா என்பதை, அடுத்து வரும் 10 நாட்கள், தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



