
ரந்தாவ் பஞ்சாங், பிப் 17 – அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14,200 மரக் கன்றுகளை ரந்தாவ் பஞ்சாங்கில் (Rantau Panjang) இரண்டு இடங்களில் பொது நடவடிக்கை படையினர் பறிமுதல் செய்தனர்.
சந்தேகத்திற்குரிய வகையில் Kampung Gual Tinggi மற்றும் Kampung Kedap ஆகிய இடங்களில் இரண்டு லோரி ஓட்டுனர்களை பொது நடவடிக்கை குழுவின் 8ஆவது பட்டாளத்தை சேர்ந்த அதிகாரிகள் கைது செய்ததாக அப்பிரிவின் அதிகாரி டத்தோ நிக் அஸ்ஹான் ( NiK Ros Azhan NiK Abdul Hamid) தெரிவித்தார்.
காலை மணி 11 அளவில் Kampung Kedapபில் மேற்கொள்ளப்பட்ட முதல் நடவடிக்கையில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 9,200 மரக் கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பூச்சிக் கொல்லிகள் இருந்த அந்த தாவரங்கள் மலாக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து 41 வயதுடைய அந்த லோரி ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.
மற்றொரு நடவடிக்கையில் இரவு மணி 9.05 அளவில் Kampung Gual Tinggiயில் 5.000 மரக் கன்றுகள் பறிமுதல் செய்யப்பட்டதோடு 33 வயதுடைய லோரி ஓட்டுநரும் கைது செய்யப்பட்டார்.
1976 ஆம் ஆண்டின் தாவரங்கள் கட்டுப்பாட்டு சட்டத்தின் 5ஆவது விதியின் கீழ் இந்த இரு சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.