கோலாலம்பூர், அக்டோபர் 10 – மலேசியா திருநாட்டில் தாய் கோவிலான கோலாலம்பூர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு அலைமகள், கலைமகள், மலைமகளைச் சிறப்பிக்கும் நவராத்திரி விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது.
அதனை முன்னிட்டு, நேற்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானத்தின் அறங்காவலர் மற்றும் வியாபாரிகள் உபய நாட்டாமை டத்தோ சிவகுமார் தலைமையில், ஏழாம் நாள், சரஸ்வதி பூஜை நடைபெற்றது.
கல்வி, கலை மற்றும் ஞானத்தின் அதிபதியாகத் திகழ்பவளைச் சிறப்பிக்கும் இந்நாளில், நமக்கு மட்டுமல்ல, சிறார்களும் நன்மையடைய வேண்டும் என்று ஒன்றிணைத்த உபய நாட்டாமையை, தேவஸ்தானத் தலைவர் தான் ஸ்ரீ நடராஜா தமதுரையில் பாராட்டினார்.
150க்கும் மேற்பட்ட 3 அன்பு இல்லங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும், B40 பிரிவைச் சேர்ந்த பத்துமலை தமிழ்ப்பள்ளி மற்றும் அப்பர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கும் நேற்று அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
மாணவர்களுக்கு மட்டுமின்றி வருகையளித்த பக்தர்களுக்கும் கோயில் பிரசாதம் வழங்கப்பட்டு, மகளிருக்குச் சேலைகளையும் வழங்கியதைக் குறித்து ம.இ.காவின் தேசிய பொருளாளரும், DSK குழுமத்தின் தலைவருமான டத்தோ சிவக்குமார் இவ்வாறு தெரிவித்தார்.
உள்ளூர் கலைஞர்களின் பக்தி மனம் கமழும் படைப்புகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்ற நவராத்திரி விழாவைக் குறித்து, அன்பளிப்பு பெற்ற குழந்தைகளும், பக்தரும் தங்களது மகிழ்ச்சியை வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்து கொண்டனர்.
ஏறக்குறைய 500 பக்தர்கள் நேற்று கோவிலுக்கு வருகையளித்து அம்பிகையின் ஆசி பெற்றுச் சென்றனர்.