
டெக்சஸ், மே-31 – அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது இந்திய-அமெரிக்கரான ஃபைசான் சாக்கி (Faizan Zaki) 2025 தேசிய எழுத்துக்கூட்டல் போட்டியில் வெற்றி வாகை சூடி வரலாறு படைத்துள்ளார்.
இடைநிலைப் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவரான ஃபைசான், “éclaircissement” என்ற கடினமான சொல்லை சரியாக எழுத்துக் கூட்டி பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
“éclaircissement” என்றால் தெளிவற்ற ஒன்றைத் தெளிவுபடுத்துதல் என்று அர்த்தமாகும்.
பிரசித்திப் பெற்ற இப்போட்டியின் வரலாற்றிலேயே, முந்தைய ஆண்டில் இரண்டாவது இடத்தைப் பிடித்து மறு ஆண்டில் முதலாவதாக வந்து வாகை சூடிய வெறும் ஐந்தே பேரில் இவரும் ஒருவராவார்.
ஃபைசான் கடந்தாண்டு மற்றோர் இந்திய வம்சாவளி போட்டியாளரான Bruhat Soma-விடம் நூலிழையில் பட்டத்தை பறிகொடுத்தார்.
2019-ல் முதன் முறையாக இதில் பங்கேற்றவர் 370-ஆவது இடத்தையே பிடித்தார்; பின்னர் 2023-ல் 21-ஆவது இடத்துக்கு முன்னேறி கடந்தாண்டு இரண்டாமிடத்தையும் இவ்வாண்டு முதலிடத்தையும் ஃபைசான் வென்றுள்ளார்.
பரிசுப் பணமாக 50,000 டாலர், கேடயம், பதக்கம் உள்ளிட்டவை ஃபைசானுக்கு வழங்கப்பட்டன.
ஃபைசானின் பெற்றோர் தென்னிந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் ஆவர்.
இவ்வெற்றியின் வழி கடந்த 36 ஆண்டுகளில் இப்போட்டியில் வாகை சூடிய 30-ஆவது இந்திய-அமெரிக்கர் என்ற பெருமையை ஃபைசான் பெறுகிறார்.
இந்த எழுத்துக் கூட்டல் போட்டியில் 1999-ஆம் ஆண்டு Nupur Lala தொடக்கி வைத்த இந்திய வம்சாவளியினரின் ஆதிக்கம் ஃபைசான் வரைத் தொடருகிறது.