அம்பாங் ஜெயா, அக் 16 – தாமான் மெலாவாத்தி, ஜாலான் E6 குன்றுப் பகுதி உட்பட அம்பாங் ஜெயாவில் 114 பகுதிகள் நிலச்சரிவுக்கான அபாய இடங்களாக திகழ்வதாக சிலாங்கூர் மெந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ( Amirudin Shari ) தெரிவித்திருக்கிறார். அம்பாங் ஜெயா மாவட்டத்தில் ஒட்டு மொத்தமாகவே 600க்கும் மேற்பட்ட இடங்கள் நிலச்சரிவுக்கான அபாயத்தை கொண்டிருப்பதாக அவர் கூறினார். Taman Melawati யில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்ட பின் அமிருடின் ஷாரி செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
அம்பாங் ஜெயா நகரான்மைக் கழகம் நிலச்சரிவு அபாயம் தொடர்பாக பட்டியலிடப்பட்ட பகுதியில் தாமான் மெலாவாத்தியில் நிலச்சரிவு ஏற்பட்ட இடமும் அடங்கும் . நிலச்சரிவுக்கு உள்ளான பகுதியிலுள்ள மண்ணை நாங்கள் பார்வையிட்டபோது அதில் சுண்ணாம்புக் கற்கள் இருந்தன. பொதுவாகவே உலுகிளாங்கில் அம்பாங் ஜெயா முதல் கோம்பாக் பத்துமலைவரை உள்ள மண் சுண்ணாம்புக் கற்களாக இருக்கிறது. அதிகமான நீரோட்டத்தினால் மண் நகர்வு ஏற்படும் பகுதிகளில் நிலச்சரிவு எளிதாக ஏற்படும். முன்பே நாங்கள் இதனை கூறியுள்ளோம். எனினும் அப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளையும் நாங்கள் காலி செய்ய முடியாது என்றும் அமிருடின் ஷாரி தெரிவித்தார்.