
பெந்தோங், செப் 19 – Janda Baik , Pulau Santapபில் முகாமிட்ட இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடாரம் மீது மரம் விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்ததோடு ஒரு சிறுவன் உட்பட இருவர் காயம் அடைந்தனர்.
இன்று காலை மணி 7.56 அளவில் இந்த பரிதாபமான சம்பவம் நடந்தது குறித்து அழைப்பை பெற்றதாக பஹாங் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் பொது உறவு அதிகாரி Zulfadli Zakaria தெரிவித்தார்.
தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு பெந்தோங் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவைச் சேர்ந்த 12 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.
சுமார் 15 மீட்டர் உயரம் உள்ள மரம் கூடாரத்தின்மீது விழுந்து கிடந்ததைத் தொடர்ந்து அந்த மரத்தை அறுத்த பின் கூடாரத்தின் உள்ளே இருந்த மூவரை தீயணைப்பு வீரர்கள் கண்டனர்.
அவர்களில் ஒரு பெண், ஒரு ஆடவர் மற்றும் சிறுவனும் இருந்தனர். அந்த பெண்மணி இறந்து கிடந்ததோடு சிறுவன் உட்பட இருவர் காயம் அடைந்திருந்ததனர்.
எனினும் அவர்களது அடையாளம் குறித்த தகவல்கள் இன்னும் தெரியவில்லையயென Zulfadli வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அப்பெண்ணின் சடலம் மேல் நடவடிக்கைக்காக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதோடு காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக பெந்தோங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.