
வாஷிங்டன், ஜூலை-8 – மலேசியாவுக்கு வரும் ஆகஸ்ட் 1 முதல் 25 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு எழுதியுள்ள அதிகாரப்பூர்வ கடிதத்தில் அதனை அவர் குறிப்பிட்டார்.
சில நாடுகளின் நியாயமற்ற வாணிப நடைமுறைகளிலிருந்து ‘அமெரிக்கத் தொழில்துறையை பாதுகாக்க’ அந்நடவடிக்கை அவசியம் என அவர் கூறிக் கொண்டார்.
அமெரிக்காவை ‘கிள்ளுக் கீரையாக’ மற்ற நாடுகள் பயன்படுத்திகொள்வதை இனியும் அனுமதிக்க முடியாது என்றார் அவர்.
மலேசியாவைப் போன்றே 25 விழுக்காடு இறக்குமதி வரி விதிக்கப்பட்ட நாடுகளில் ஜப்பான், தென் கொரியா, துனிசியா, கசக்ஸ்தான் உள்ளிட்டவை அடங்கும்.
தென்னாப்பிரிக்கா, வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு 30 விழுக்காடும், லாவோஸ், மியன்மார் நாடுகளுக்கு 40 விழுக்காடு வரையிலும் இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 2-ஆம் தேதி மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பு என்ற பெயரில் கூடுதல் வரிகளை விதித்து ட்ரம்ப் உத்தவிட்டார்.
அப்போது மலேசியாவுக்கு 24% வரி விதிக்கப்பட்டது.
என்றாலும் பின்னர் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக வரி விதிப்பை 90 நாட்களுக்கு அவர் ஒத்தி வைத்தார்.
அவ்வுத்தரவு புதன்கிழமையோடு முடிவடைகிறது; எனினும் அது ஆகஸ்ட் 1 வரை நீட்டிக்கப்படுமென வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கூறினார்.
தொடக்கத்தில் 24 விழுக்காடு வரி விதிக்கப்பட்ட மலேசியா, அது குறித்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதும் இப்போது 1 விழுக்காடு அதிகமாக வரி விதிப்புக்கு ஆளாகியுள்ளது.