கோலாலம்பூர், நவம்பர் 16 – பதின்ம வயதினரிடையே ஏற்படுகின்ற சவால்களைக் கருவாகக் கொண்டு ஆசிரியர் வனிதா இராமகிருஷ்ணன் எழுத்தில் மலர்ந்துள்ளது ‘வியன்’ சிறுகதை புத்தகம்.
ஆங்கிலம், தமிழ் என இருமொழிகளில் இவரின் சுயப் படைப்பால் உருவாக்கம் கண்ட இப்புத்தகம், 14 சிறுகதைகளை உள்ளடக்கியுள்ளது.
பள்ளி முதல் கல்லூரி வரை பதின்ம வயதினர் எதிர்நோக்கும் சவால்கள் சிறுகதைகளாக எழுதப்பட்டுள்ளதாகக் கூறினார், 22 ஆண்டுகள் ஆசிரியர் துறையில் அனுபவம் கொண்டவரான வனிதா.
அகன்ற உலகில் இளையோர்கள் பல சிக்கல்களை எதிர்நோக்கினாலும், பல வாய்ப்புகளும் அவர்களைச் சுற்றி இருக்கவே செய்கிறது.
அதனை முறையாகக் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்வது இளையோரின் புத்திக்கூர்மையே என்பதை உணர்த்தவே பாரதியின் வரிகளிலிருந்து ‘வியன்’ என்ற சொல்லை தனது புத்தகத்திற்குப் பெயராகச் சூட்டியதாக இவர் கூறுகிறார்.
சுமார் ஓராண்டு கால முயற்சியில் உருவாக்கம் கண்ட இப்புத்தகம், எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி அதிகாரப்பூர்வமாகப் பிரிக்க்ஃபீல்ட்ஸ், மலேசியப் பார்வையற்றோர் சங்க மண்டபத்தில் வெளியீடு காணவுள்ளது.
மாணவர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் அதேவேளையில், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக எழுதப்பட்டுள்ள இச்சிறுகதை புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு ஆசிரியர் வனிதா கேட்டுக் கொண்டார்.