கலிஃபோர்னியா, நவம்பர்-22 – பிருத்விராஜ், அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடு ஜீவிதம்’ மலையாளப் படத்தின் பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான், 2024-ஆம் ஆண்டுக்கான ‘HMMA’ எனப்படும் Hollywood Music in Media Awards விருதை வென்றுள்ளார்.
வெளிநாட்டுப் படங்களுக்கான (Independent Films) பிரிவில் அவ்விருது கிடைத்துள்ளது.
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற அவ்விருது விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் சார்பாக, ‘ஆடு ஜீவிதம்’ படத்தின் இயக்குநர் Blessy Ipe Thomas விருதினைப் பெற்றுக் கொண்டார்.
ஆஸ்கார் விருதுக்கான ஒரு முன்னோட்டமாகக் கருதப்படும் விருது விழாக்களில் இதுவும் ஒன்று என்பதால், ரஹ்மானுக்கு இந்த HMMA விருது கிடைத்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடவர் சிக்கித் தவிக்கும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட அப்படத்திற்கு, ரஹ்மானின் பின்னணி இசை உயிரோட்டமாக அமைந்ததாக ஏற்கனவே பாராட்டுகள் குவிந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகளவில் கவனம் ஈர்த்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப் பெற்றதாகும்.