
கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-4 – காலனித்துவ ஆட்சியின் போது மலாயா இந்தியர்களின் தோட்டப் புற வாழ்க்கையை, நாட்டுப்புறப் பாடல்களின் வழி மக்களுக்குக் கொண்டுச் சேர்க்கும் முயற்சியாக ‘ஆராரோ ஆரிரரோ’ இசை ஆவணப் படம் தயாராகி வருகிறது.
ஓம் சக்தி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் கோலாலாம்பூர் புக்கிட் பிந்தாங்கில் உள்ள, The Grey Box-சில் நேற்று அதன் முன்னோட்ட காட்சி வெளியீடு கண்டது. பிரிட்டிஷ் காலனித்துவ தோட்டங்களில் பணிபுரிந்த தமிழ் ஒப்பந்தத் தொழிலாளர்களின் சொல்லப்படாத கதையைச் சொல்ல வருகிறது இந்த ஆவணப் படம்.
காதல், எதிர்ப்பு, துக்கம் மற்றும் உயிர்வாழ்வு ஆகியவற்றைப் பொருளாகக் கொண்டு, அத்தொழிலாளர்கள் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள் காலப்போக்கில் கிட்டத்தட்ட மறக்கப்பட்டு அல்லது மறைந்துபோகும் நிலையில் உள்ளன.
அவற்றைப் புதுப்பித்து மக்களுக்குத் தருவதே இம்முயற்சியின் முக்கிய நோக்கம் என, இணைத் தயாரிப்பாளர் குமணவண்ணன் ராஜேந்திரன் தெரிவித்தார்.
வரும் செப்டம்பர் தொடங்கி அடுத்தாண்டு மார்ச்சில் இத்திட்டம் நிறைவடைய இலக்கு வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் ஒத்துழைப்பிலும் பாடல்களுக்கு உயிர்கொடுக்கப்படவுள்ளதாக, இயக்குநர் கோகுலராஜன் ராஜேந்திரன் சொன்னார்.
நேற்றைய நிகழ்வுக்குப் பிறகு 4-ஆவது மாடியில் ஒரு மினி கண்காட்சியும் நடைபெற்றது; இதில் தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் வரிகள், புகைப்படங்கள், காப்பகப் பொருள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டன.
மலேசிய இந்தியர்களின் வலியைப் பதிவுச் செய்யும் இந்த இசை ஆவணப் பட முயற்சிக்கு நிதித் திரட்டும் இயக்கமும் தொடங்கப்பட்டது.
மொத்த பட்ஜெட்டான RM297,801 தொகையில் இதுவரை 60 விழுக்காட்டை திரட்டி விட்டதாகவும், எஞ்சியவற்றை பொது மக்களிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் குமணவண்ணன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
நிதி ஆதரவளிக்க விரும்பும் பொது மக்கள் http://www.omsakthifilms.com என்ற இணைய அகப்பக்கத்தை நாடலாம்.