புத்ராஜெயா, டிசம்பர்-19, நாட்டில் இடைநிலைக் கல்வியைக் கட்டாயமாக்க ஏதுவாக, 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டம் அடுத்தாண்டு திருத்தப்படும்.
ஒவ்வொரு மலேசியக் குழந்தையும் கல்வி வாய்ப்பைப் பெறுவதை உறுதிச் செய்வதே அதன் நோக்கம் என, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் ( Fadhlina Sidek) கூறினார்.
இதன் மூலம், மாணவர்கள் குறைந்தபட்சம் SPM சான்றிதழையாவது பெறும் வகையில் 11 ஆண்டு பள்ளிக் கல்வி கட்டாயமாக்கப்படும் என்றார் அவர்.
சட்டத் திருத்த பரிந்துரைகள் தேசியச் சட்டத் துறைத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன;
அவை ஏற்றுக் கொள்ளப்பட்டால், வரும் பிப்ரவரியில் மக்களவையில் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் சொன்னார்.
தேசியக் கல்விக் கொள்கைகளில் நாம் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கியுள்ளோம்; அதன் விகிதமும் 98 முதல் 99 விழுக்காடு என்ற உயரிய அளவில் உள்ளது.
அடுத்து, இடைநிலைப் பள்ளிக் கல்வி தான் அமைச்சின் குறி;
அவ்வகையில், இடைநிலைப் பள்ளிகளிலிருந்து குறிப்பாக மூன்றாம் படிவம் முடிந்த கையோடு எவரும் பாதியிலேயே படிப்பை நிறுத்தி விடாதிருப்பதை அமைச்சு உறுதிச் செய்ய விரும்புவதாக ஃபாட்லீனா சொன்னார்.