
சுங்கை பூலோ, ஜனவரி-14 – பொங்கல் திருநாளின் தித்திப்பை மேலும் மெருகூட்டும் வகையில், மலேசிய இந்தியச் சமூகத்துக்கு அரசாங்கம் தெக்குன் கடனுதவித் திட்டம் வாயிலாக முதல் முறையாக 100 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது.
தெக்குன் நேஷனல் கீழ் இந்தியத் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டங்களுக்காக இந்நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இம்மகிழ்ச்சி செய்தியை அறிவித்தார்.
2015-லிருந்து தெக்குன் திட்டத்திற்கு இவ்வளவுப் பெரிய நிதி ஒதுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும் என கூறிய அவர், நாளை முதல் அக்கடனுதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தேவைப்படும் முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பங்கள் செய்யப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்நிதி, SpumiGoes Big திட்டத்தின் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட்டும் Spumi திட்டம் வாயிலாக 50 மில்லியன் ரிங்கிட்டும் கடனுதவியாக வழங்கப்படும்.
இதன் வழி 5000 தொழில்முனைவர்கள் பயனடைவார்கள் என ரமணன் கூறினார்.
எனவே இவ்வாய்ப்பை இந்தியத் தொழில்முனைவோர் நன்கு பயன்படுத்திக் கொண்டு வர்த்தகத்தை பெருக்கிக் கொள்ள வேண்டுமென துணையமைச்சர் கேட்டுக் கொண்டார்.
நிதி ஒதுக்கீட்டுக்கு வழி வகுத்த தெக்குன் நேஷனல் தலைமை செயலதிகாரி டத்தோ அடாம் கானிக்கும் டத்தோ ஸ்ரீ ரமணன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
இது வெறும் தொடக்கம் மட்டுமே; பிரதமரின் உத்தரவுக் கேற்ப இன்னும் அதிகமான நலத் திட்டங்களை இந்தியச் சமுகம் இவ்வாண்டு எதிர்பார்க்கலாம்.
சொன்னதை செய்யும் மடானி அரசாங்கம் இந்தியச் சமூகத்துக்கான வாக்குறுதியை நிச்சயம் நிறைவேற்றும்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரமணன், தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற வணக்கம் பொங்கல் விழாவில் பங்கேற்ற போது இவ்வறிவிப்பை வெளியிட்டார்.
இவ்விழாவில் கலந்துக் கொண்ட சிலாங்கூர் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் Dr குணராஜ் ஜோர்ஜ் மற்றும் டத்தோ ஸ்ரீ ரமணனின் முதன்மை செயலாளர் டத்தோ அன்புமனி உள்ளிட்டோரும் இது குறித்து செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர்.
100க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் பொங்கல் வைத்து கொண்டாடிய மக்கள் சிலர் வணக்கம் மலேசியாவிடம் தங்களின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
பட்ஜெட்டில் தெக்கூன் வழி இந்தியர்ளுக்கு 30 மில்லியன் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்றைய பொங்கல் நன்னாளில் 70 மில்லியன் ரிங்கிட் அதிகரிக்க்கப்பட்டு, தற்போது 100 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.