கோலாலம்பூர், நவம்பர்-25 – இந்தியச் சமூகத்தைப் பிரதிநிதித்து 22 அரசு சார்பற்ற அமைப்புகள் இன்று பினாங்கு, தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜானை (Wan Saiful Wan Jan) நேரில் சந்தித்தன.
நாடாளுமன்றக் கட்டடத்தில் நடைபெற்ற அச்சந்திப்பின் போது, ஒட்டுமொத்த இந்தியச் சமூகத்தின் பொருளாதார மேம்பாட்டுக்கான ஆலோசனைகள் மற்றும் செயல்திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்தியச் சமூகம் தொடர்பான விஷயங்களுக்கு எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் குரல் எழுப்ப வேண்டுமென்றும், அவர்கள் கேட்டுக் கொண்டதாக வான் சைஃபுல் தெரிவித்தார்.
அவர்களின் மனக்குமுறல்களைக் கேட்கையில், இந்தியர்களின் நலன் காப்போம் என 15-வது பொதுத்தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியை புத்ராஜெயா காற்றில் பறக்க விட்டிருப்பது தெளிவாகத் தெரிவதாக, தனது முகநூல் பதிவில் வான் சைஃபுல் கூறிக் கொண்டார்.
இந்நிலையில், மலேசிய இந்தியர்களின் நலன் காக்கவல்ல திட்டங்களை, பெர்சாத்து கட்சியின் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களுக்கான Bersekutu பிரிவும் வரைந்து வருவதாக, அக்கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் கூறினார்.
இதனிடையே இச்சந்திப்பு பற்றி I25 இயக்கத்தை சேர்ந்தவரும் கோபியோவின் துணைத்தலைவருமான ரவிந்திரன் வணக்கம் மலேசியாவிடம் கருத்துரைத்தபோது, இந்திய மேம்பாட்டு திட்டங்கள் ஆக்ககரமான முறையில் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பங்களிப்பை செய்ய வேடும் என்ற நோக்கில் நடத்தப்பட்டதாக தெரிவித்தார்.
எதிர்கட்சி உறுப்பினர்களும் இந்தியர்களின் மேம்பாட்டுக்கான ஒரு தீர்க்கமான திட்டத்தை கொண்டிருப்பது அவசியம். அதை முன்னெடுப்பதற்கு வான் சைபுல் உறுதியளித்திருப்பதாக ரவீந்திரன் தெரிவித்தார்.